ஆதி அத்தி வரதர் வைபவம்
அத்தி கிரி அருளாளப்பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின்மேல்அழகர்வந்தார்
கச்சிதனில் கண்கொடுக்கும்பெருமாள் வந்தார்
கருத வரந்தருதெய்வப்பெருமாள் வந்தார்
முத்திமழைபொழியுமுகில்வண்ணர் வந்தார்
மூலமெனவோலமிடவல்லார் வந்தார்
உத்தரவேதிக்குள்ளேயுதித்தார் வந்தார்
உம்பர் தொழுங் கழலுடையயார் வந்தார்தாமே .
அருள் திரு .வேதாந்த தேசிகர் என்னும் வைணவ சித்தாந்தத்தின் அருள் மறையாய் விளங்கும் ஆசாரியன் அருளிய ப்ரபந்தங்களில் ஒன்றான திருச்சின்ன மாலையில் பேசியபடி அத்தி கிரி அருளாளன் வந்தார் வந்தார் மக்கள் குலம் எல்லாம் தரிசிக்கும்படி !
வெகு நீண்ட காலமாகவே கடைபிடித்துவரும் நியமம்தான் , அதி அத்தி வரதர் காஞ்சிமாநகரில் ,ஸ்ரீ வரத ராஜ பெருமாள்கோயிலின் அருகிலுள்ள அனந்தசரஸ் என்னும் திருக்குளத்திலிருந்து 40வருடங்களுக்குஒருமுறை பூலோக மக்களைகாண்பதற்காக எழுந்தருளுவது.இவ்வாறு தேவாதி ராஜன் கோவிலின்வசந்த மண்டபத்தில்
எழுந்தருளி48 நாட்கள் தன்னைஆர்வமுடனும்,பக்தியுடனும் தரிசிக்க வரும்
பக்தர்களுக்கு ,கருணையுடன் சேவை சாதிப்பது ஒரு வழக்கமாக உள்ளது .
அவ்வாறே இந்த வருடம் அதாவது 2019 ஜூலை மாதம் 1ந்தேதி முதல் காஞ்சிமாநகரில் பெருமாள் கோயில்வசந்த மண்டபத்தில் எழுந்தருருளியிருந்துதம்மைக்காணவந்தவர்களுக்கெல்லாம் ஆனந்தமாய்அருள்பாலித்தார் அத்திகிரியருளாளப்பெருமாள்.
அவ்வாறு மிகவும் அபூர்வமாக 40 வருடங்களுக்கு ஒருமுறை திருக்குளத்திலிருந்து ,வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் அந்த அத்திவரதரை பக்தியோடும் ,ஆவலோடும் தமக்கு உற்றவர் என்றஎண்ணத்தில் அவனது திருவடிகளைக்கண்டு சரண்புகுந்து மகிழ்ச்சியுற்று தினமும் லக்ஷோப லக்ஷம் பக்தர்கள் திரண்டு வந்து அவரை
தரிசித்துமறுபடியும் எப்போது காண்போமோ என்ற ஏக்கத்துடனும் அதே சமயம் இப்போது தரிசித்து விட்டோம் என்று மனத்திருப்தியுடனும் திருப்பிச்செல்கின்றனர் .
" வரதய்யா வரதய்யா அத்தி வரதய்யா
ஸ்ரீ காஞ்சியில் உன்காட்சி சித்தியல்லவா "
இந்த கோஷமே அங்கு ஓங்கி ஒலித்தது.
ஆதி அத்தி வரதர் திருவுருவம் அத்தி மரத்தினால் தேவ சிற்பி விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்டது என்பர் .
ஆதியில் ஸ்ரீ பிரம்மா தான் இழந்த சக்தியயை திரும்பப்பெற அசரீரியின் வாக்குப்படி புண்ணிய பூமியாகிய அத்திகிரி (ஹஸ்திகிரி -யானை மலை )என்ற உத்தரவேதியில் யாக குண்டம் அமைத்து அஸ்வமேத
யாகம் செய்தால் இழந்த சக்தியயை பெறலாம் என்பதற்கிணங்க ,யாகம் துவங்க ,அவரது துணைவி சரஸ்வ்தி அதை தடுக்க வேகவதியாக ஆக்கிரோஷத்துடன் வெள்ளமாக புரண்டு வர அந்த நேரத்தில் ஸ்ரீமன் நாராயணன் குறுக்கே படுத்து தடுத்து ,ப்ரம்மாவின் யாகம் பூர்த்தியாக அருளினார் .பிரம்மன்தன் சகிகளான காயத்ரி,மற்றும் சாவித்ரி யையும் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு யாகத்தை நடத்தி முடித்தார் .
அந்த யாக அக்னிகுண்டத்திலிருந்து கோடி சூரிய பிரகாசத்துடன் ,ஆஜானுபாகுவாக அத்தி மர த்திருமேனியாய் புண்ணிய கோடி விமானத்தில் எழுந்தருளி ,அவர் வேண்டியதை அருளி ,மேலும் வினவ ",நீங்கள் இங்கேயே குடிகொண்டு மக்களுக்கு அருள் பாலிக்கவேண்டும் "என்று வேண்ட ,அவரும் அவ்வாறே ஆகட்டும் என்பதைக்கேட்டு பிரம்மாவும் சத்திய லோகத்திற்கு திரும்பச்சென்றார் .
பின்பு அத்தி வரதருக்கு கோவில் எழுப்பப்பட்டு ,ஆராதனைகள் நடந்து வருங்காலத்தில் ,அச்சமயம் பெருமானுக்கு தொண்டாற்றி வந்த வேதியர் கனவில் வந்த பெருமாள் "என்மேனி யாகத்தீயால் வெப்பத்தால் ,சுடுகிறது .
வெப்பம் தணிய என்னை கோவிலுக்கு அருகிலுள்ள "அனந்த சரஸ் "என்னும்
திருக்குளத்தில் "ஜலசயனத்தில் எழுந்தருள்செய்து விட்டு ,எனக்கு பதிலாக ,
வேறு சிலா மூர்த்தியை கர்ப்ப கிரஹத்தில் பிரதிஷ்டை செய்து வழி படுங்கள் " என்றும் ,தான் ஆக ம விதிகளின் படி 40 வருடங்களுக்கு ஒரு முறை திருக்குளத்திலிருந்து கோயிலுக்குள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு அருள் பாலிப்பேன் "என்று திரு உள்ளம் தெரிவிக்க ,அந்த வேதியரின் ,அருள் வாக்கு ப்படியே ,இத்தனைக்காலமும் ஆதி அத்தி வரதராஜனின் அர்ச்சாரூப வைபவம் நடந்தேறுகிறது என்று பெரியோர்கள் சொல்லக்கேட்டது.
இப்போது கோயிலில் நாம் காஞ்சியில் தரிசிக்கும் அர்ச்சா மூர்த்தி வரதராஜபெருமாள் ,வெகு காலத்திற்கு முன் பழையசீவரம் என்னும் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு ,இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு, ,அருள் பலித்து வருபவர் . என்று கூறப்படுகிறது .
ஸ்ரீ காஞ்சி .வரதராஜரை போற்றிப்பாடிப்பரவிய வைணவ ஆசாரியர்களும் ,மஹநீயர்களும் அநேகம் .அவர்களில் ஸ்ரீமத் ராமானுஜரும் மற்றும் ஸ்ரீமத் வேதாந்த தேசிகரும் ஆவர் .ராமானுஜரின் அத்தியந்த சிஷ்யரான கூரத்தாழ்வான் எம்பெருமானுக்கு ஆலவட்டம் கைங்கர்யம் செய்யும் பெருமை பெற்றவர் .அவருக்கு உற்ற நண்பனாக பேசும் தெய்வமாகவே இருந்திருக்கிறார் காஞ்சி வரதர்.இவர் மூலம் ஸ்ரீ ராமானுஜருக்கு ஆறு கட்டளைகள் பிறப்பித்தவரும் இப்பெருமானே !
ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் காஞ்சி பேரருளாளப்பெருமாள் மேல் கொண்ட காதல் பக்தியால் மகிழ்ந்து ,நெகிழ்ந்து அவரைப்போற்றி பல தமிழ் பாசுரங்களை ப்பாடியுள்ளார்.அவைகளை எல்லாம் திரட்டி தேசிகப்பிரபந்தம் எனப்பெயரிட்டு சேவித்து பெரியோர்கள்போற்றி வருகின்றனர் .
இவரது பாசுரங்களின் சொல் ,நடையழகும் இலக்கண அழகும் மிகுந்து படிப்போரை நெஞ்சுறுகச்செய்து பேரருளாளரின் பால் பக்திப்பெருக்கை ஏற்படுத்தும் .தேசிகரின் ப்ரபந்தங்களின் ஒன்றான திருச்சின்னமாலை என்னும் பிரபந்தம் வெகு இனிமையானது.
வரதராஜப்பெருமாள் வீதி உலா விற்கு எழுந்தருளும்போது திருச்சின்னம் என்னும் வாத்தியம் இசைக்கப்படும் .அதன் இனிமையில் மகிழ்ந்து அதையே தலைப்பாக வைத்து பெருமாளின் உருவ அழகு ,நடை யழகு ,அவரது அலங்காரம் என்று அழகாக வருணித்துப்பாடியுள்ளார் ஆசாரியர் . அப்பாசுரம் :
அத்திகிரி அருளாளப்பெருமாள் வந்தார் .
ஆனை பரி தேரின் மேலழகர் வந்தார்
கச்சி தனிற் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார் என்று தொடர்ந்து உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே என்று 10ம் பாசுரம் முடியும் .தேவராஜப்பெருமானின் வருகையை கட்டியங்கூறிக்கொண்டு முன் செல்வது போன்ற நடைஅழகைக்கொண்ட ப்பாசுரங்கள் கேட்க ,படிக்க த் தெவிட்டாத தேனமுது .
இவ்வாறு வைணவ ஆசாரியார்களால் புகழ்ந்து போற்றிய ,மூர்த்தியாகிய ஆதி அத்திகிரியருளாளன் 40 வருடங்கள் கழித்து காஞ்சியில் எழுந்தருளியிருக்கிறார் என்று கேட்ட அடியேனுக்கு அவரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்காதா என்ன ?அவன் திரு உள்ளம் கொண்டால் அல்லவா ஈடேறும் .
பேரருளாளன் திருவிளையாடல் தான் என்னை வியக்க வைத்தது .என்ன ஆச்சர்யம் .தன்னை வந்து தரிசிக்கும்படியான பாக்கியத்தை எங்கள் மகன் மூலம் நிறைவேற்றித்தந்தான் .எப்படி ?
சுவாரஸ்யமான கதை .
எங்கள் மகன் பார்த்தசாரதி தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ,எ
ன் கணவரின் 80வது பிறந்த நாளை அதாவது சதாபிஷேக வைபவத்தை சிறப்பாக நடத்தி மகிழ்வதற்காக அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு வந்திருந்தான் .அந்தவைபவமும் அழகாக சீரும் சிறப்புமாக உற்றார் ,உறவினர் முன்னிலையில் ,2019 ஜூன் 24ந்தேதி நடந்து முடிந்தது .
அத்தருணத்தில் ,ஜூலை 1ந்தேதி ஆதி அத்தி வரதர் 40 வருடங்களுக்கு பிறகுகாஞ்சி மா நகரிலுள்ள அனந்த ஸரஸ் என்ற திருக்குளத்திலிருத்து ,மக்களுக்கு சேவை சாதிக்கப்போகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டு ,அந்தவிவரங்களை எல்லாம் என்னிடம் கேட்டு தெரிந்துகொண்டான் என் மகன்.ஜூலை 3ந்தேதி இரவு ,திடீரென்று நினைத்துக்கொண்டு நாளை காலை 4ந்தேதி ,கிளம்பி கஞ்சிக்குப்போய் அத்தி வரதரை சேவித்து விட்டு வருவோம் எனஎங்கள் எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி .
அவ்வாறே 4ந்தேதி காலையில் ஒரு காரில் நான் ,என் கணவர்,பிள்ளை ,மருமகள் ,பேரன் மாதவ் மற்றும் ,பேத்தி யாஹ்வி யுடன் ஆனந்தமாக சென்றோம் . பெருங்கூட்டம் வழியெங்கும் . கோவிலுக்கு 2 கிலோ மீட்டர் முன்பே கார்களை நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசாங்கமும் ,கோவில் நிர்வாகமும் ஏற்பாடுகள் செய்ந்திருந்தன ,
அங்கிருந்து ஆடோ ரிக் க்ஷா க்களில் கோயிலுக்கு போகும் வழியில் ,காஞ்சியில் கோலோச்சும் ,பெருமாளின் தங்கையாம் புகழ் வாய்ந்த காமாக்ஷி அம்மனையும் சேவித்து மகிழ்ந்தோம் ,ஆங்காங்கே நிறுத்தி உண்டு சென்ற வண்டி கோயிலின்
கோபுர வாசலின் முன் நின்றது .
அப்போது மணி காலை 10.00 .கூட்டம் நீண்டு அனுமார் வால் போலே வெகு தூரத்திற்கு நின்று கொண்டிருந்தது .எப்படி இந்த வரிசையி ல் சென்று பெருமாளை சேவிக்கப்போகிறோம் என்று மலைப்பாயிருந்தது .உத்ஸாகம் ஒரு பக்கம் இருந்தாலும் ,உட்காரவேண்டும் சிறிது நேரம் எனக்கும் என் கணவருக்கும் கால்கள் கெஞ்ச ஆரம்பித்து விட்டன .கோயில் மண்டபத்தில் சாய்ந்துகொண்டோம் .நிதானமாக
" குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் "இதோ வருகிறோம் ஓட்டமும் நடையுமாக ஏன் பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் ,போலீஸ் கெடுபிடிகளுக்கு
ஈடு கொடுத்து,கோயிலுக்குள்ளே சென்று எப்படியோ 2 சக்கர நாற்காலிகளைக் உருட்டிக்கொண்டு வந்தனர் .நா ங்கள் இருவரும் அதில் சொகுசாக உட்கார்ந்து க்கொள்ள இருவரையும் அவர்கள் தள்ளிக்கொண்டு செல்ல ,பின்னால் பேரப்பிள்ளைகள் தொடர நீண்ட வரிசையைக்கடந்து வயது முதிர்ந்தோர் என்ற சலுகையில் முன்னாள் சென்றுஒரு வழியாக வசந்த மண்டப வளாகத்திற்குள் வந்து முதியோர்க்குள்ள வரிசையில்
வீல் சேரில் காத்திருந்தோம் ..
போலீஸ் காரர்கள் அங்கங்கே நின்று மக்களை வரிசையாக நிதானமாக நகர்ந்து செல்லுமாறு பொறுமையாகவும் ,சிலசமயம் கண்டித்தும் அறிவுறுத்திக்கொண்டிருந்தனர் மதியம் .1.00 மணி ஆகிவிட்டது ,.முதியோர் வரிசை நகரவேயில்லை ..பொறுமை இழந்து சிலர் சத்தம்போட ,கண்காணிப்பவர்கள் , இதோ அனுப்புகிறோம் என்று ஒரு 10 வீல் சேர் மக்களை அனுப்பினர் .
எங்கள் குழந்தைகள் பொறுமை இழந்து விட்டனர். என் பேரன் கேட்டான் ."நம்ம ஊர் லேய கோவில் இருக்கே !இவ்வளவு தூரம் வந்து காத்திருந்து சேவிக்கணுமா ,,போகலாம்ப்பா எனக்கு பசிக்கிறது என்றான் .ஏன் பேத்திக்கோ முகம் எல்லாம் சிவந்து போய் துவண்டு பொய் விட்டாள் .வெளி நாட்டு வாசிகளான அவர்களுக்கு இந்த வெயில் ,கூட்டம் எல்லாம் புது
அனுபவம்.God is every where.என்ற நம்பிக்கையயை அவர்கள் இந்த சிறு வயதிலேயே
பெற்றிருப்பது அருமை .
கிட்டத்தட்ட 5 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு அடியார்களுக்காகவும் ,தம் பக்தர்களுக்காகவும் ,சர்வாலங்கார பூஷிதராய் சயனத் திருக்கோலத்தில்
அருள் பாலித்த ஆதி அத்த வரதரை உளமார கண்ணார பக்தி பரவசத்துடன்
சேவித்து மகிழ்ந்தோம் .அவன் அருளால் அவன் தாள் தரிசிக்கும் பாக்கியம்
கிட்டியது .
அமெரிக்காவிலிருந்து தக்க தருணத்தில் தன் குழந்தைகளுடன் வந்து அத்தி வரதரை அதுவும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளும் அந்த அபூர்வ காட்சியை கண்டு களிக்கும் பாக்யத்தைப் பெற்றோம் என்று என் மகன் குடும்பத்தினர் மகிழ்ந்தனர் .அத்தி வரதரை சேவிக்க அக்கறையுடன் அழைத்துச்சென்ற என் மகன் ,மருமகளுக்கு ஒரு நன்றி .
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் நாங்கள் இரண்டாவது முறை அத்தி வரதரை சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது,1979ல் வரதர் திருக்குளத்திலிருந்துஎழுந்தருளியபோது 3 வயது குழந்தையான சாரதி யையும் கூட்டிக்கொண்டு சென்றிருந்தோம் .ஆகையால், என் மகனும் 2வது முறையும் ,என் பேத்தி யாஹ்வியும் , பேரன் மாதவ் ம் அதிர்ஷ்டவசமாக பகவானை முதல் முறை யாக சேவிக்கும் பாக்கியத்தைப் பெற்றனர் .
கி .பி . 2059ல் பேரருளாளன் மறுபடியும்பூமிக்கு வரும்போது ,இந்த பேரப்பிள்ளைகள் ,இந்த நிகழ்வை கேள்விப்பட்டால் அவர்களது இந்த அனுபவத்தை நினைத்து மகிழலாம் .தெய்வ கடாக்ஷம் இருந்தால் 2வது முறையும்தரிசிக்கும் பாக்கியம் கிட்டலாம் .
சரி .நிகழ்ச்சிக்கு வருவோம் .என்ன ஒரு கோலாலகலமான காட்சி .ஜனத்திரள் அலைகடலென இலட்சம் லட்சமாக அவரைக்காண பல ஊர்களிலிருந்தும் ,மற்றும் பல வெளி நாடுகளில் இருந்தும் ,பல இடையூறுகளையும் கடந்து வந்து மனம் மிக நெகிழ்ந்து குளிர்ந்து வழி பட்டனர் .கோவிந்தா கோவிந்தா என்ற நாம கோஷம் வானைப்பிளந்தது .
வண்ண வண்ண ஆடைகளில் தங்களை அழகாக அலங்கரித்துக்கொண்டு ஆசையுடன் தங்கள் தேவராஜனைக்காண வந்த தம் பக்தர்களை அதே ஆவலுடன் அத்தி வரதரும் தினம்ஒரு வண்ணப்பட்டாடை
அணிந்து பலவித வண்ண மலர்களால் ஆன பெரிய பெரிய தண்டுமாலைகளை உச்சி முதல் பாதம் வரை சூடிக்கொண்டு தன் திவ்ய தரிசனத்தை சயனக்கோலத்தில் தந்தருளினார். அவருக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற கைங்கர்ய பரர்களுக்கு மிக்க நன்றி.
இந்த கோலாகலமான நிகழ்வு 48 நாள்கள் தொடர்ந்தது .
அன்று பிருந்தாவனத்தில் கண்ணன் கோபியர்களுடன் கை கோர்த்து ராஸக்ரீடை செய்து நடனமாடிய காட்சியாகவே எனக்குத் தோன்றியது அந்த பக்தர்கள் கூட்டமும் அவர்கள் எழுப்பிய கோவிந்தா கோவிந்தா என்ற கோஷமும் ,அதற்கு பலரது ஒயிலாட்டமும் எங்களை உத்ஸாகப்படுத்தியது .
ஒரு நிலையில் நடனமாடிக்கொண்டிருந்த கண்ணன் ஒரு கணத்தில் அவர்களை விட்டு மறைந்து விட்டான் .அவனைப்பிரிந்த கோபியர்கள் எல்லோரும் மறுபடியும் அவன் எப்போது வருவான் என்று விழி மேல் விழி வைத்து காத்திருந்தனர்.
அந்த நிலையில் தான் நாங்களும் இருந்தோம் அத்தி வரதரை தரிசித்துவிட்டு ,அந்த சன்னதியை நீங்கி வெளியே வந்தவுடன் !
கண்ணாரக்கண்டு மனதில் அவரை பதித்துக்கொண்டு ,மாலை 7மணிக்கு மேல் வீட்டை வந்தடைந்தோம் .
ஜூலை 24 ன் தேதி முதல் அவர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு திருகாட்சியளித்தார் .அவரது திவ்ய மங்கள ரூபத்தை வீட்டிலிருந்தபடியே
ஒளிக்காட்சி பெட்டியில் பார்த்து மகிழ்ந்தோம் .
2019 ஆகஸ்ட் 17தேதி,48ம் நாள் அன்று மறுபடியும் தன் யதா ஸ்தானமாகிய அமிர்த சரஸ் திருக்குளத்தில் சயனக்கோலத்தில் எழுந்தருளிவிட்டார் .நமக்கு உற்றவரை பிரிந்து விட்டது போன்று மனதில் ஒரு அழுத்தம்
அவரை மறுபடியும் எப்போது காண்போம் என்று நம்மை எல்லாம் எங்க வைத்து அவர் அனந்த சரஸில் யோக நித்திரையில் ஆழ்ந்து விட்டார் .
தான் சங்கல்பித்துக்கொண்டபடி பூலோக வாசிகளுடன் வந்திருந்து அவர்களது குறை ,நிறைகளை அனுபவித்து , அவர்களை எல்லாம் ஏங்க வைத்து மீண்டும் ஜலசயனத்தில் ஆழ்ந்தது ,அந்த மஹாவிஷ்ணுவின் லீலா விநோதங்களின் ஒரு நீட்சியாகவே அடியேனுக்குத் தோன்றுகிறது .
காஞ்சி ராஜனாகிய அத்தி வரதரை சேவித்து அவர் அருளாசியை ப்பெற்றதை நினைத்து மகிழ்வதோடல்லாமல் ,அடுத்து கி .பி.2059ல்,நம் சந்ததியர் அவரை தரிசிக்கும் பாக்கியத்தைப்பெறுவர் என்பதை நினைத்து நாம் சமாதானமடைவோம் .
ஸ்வதந்திரரான வைணவ ஆசாரியன் ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் அருளாளப்பெருமாள் பெருமைகளை" மெய் விரத மான்மியம்" என்ற பிரபந்தத்தில் அருளிசெய்த்துளார்
அதனைக் குறிப்பிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன் .
வாழி யருளாளர் வாழி யணி யத்திகிரி
வாழி எதிராஜன் வாசகத்தோர் -வாழி
சரணாகதி எனும் சார்வுடன் மற்றொன்றை
அரணாகக் கொள்ளாதரன்பு.
ஆசார்யன் திருவடிகளே சரணம் ,
.